vcri, Salem

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலம்

தோற்றம்

தமிழ் நாடு அரசு, சேலம் மாவட்டத்தில் தலைவாசல் கூட்டு சாலையில் ரூ.118.76 கோடி செலவில் ஐந்தாவது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (வி.சி.ஆர்.ஐ.) நிறுவப்படும் என்று அரசாணை (நிலை) எண். 155 கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை (அ.ஆ-6) நாள் 01/11/2019 மற்றும் அரசாணை (நிலை) எண் 4, நாள் 08/01/2021 மூலம் அறிவித்தது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 09.02.2020 அன்று சேலத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து, சேலம், தலைவாசல் கூட்டு சாலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் 22.02.2021 அன்று திறக்கப்பட்டது. இக்கல்லூரி சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் (NH 79) சேலம் நகரத்திலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், தலைவாசலில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் மொத்தம் 77.98 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது கல்வியாண்டு (2020-21) முதல் இளங்கலை கால்நடை அறிவியல் பட்டப் படிப்பை வழங்குகிறது.

நோக்கங்கள்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேலத்தில் நிறுவப்படுவதன் நோக்கம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சேவைகளை மிக உயர்ந்த தரத்தில் வழங்குவது, கால்நடை மற்றும் கோழித் துறைகளுக்கு புதிய உத்வேகம் அளிப்பது மற்றும் வடமேற்கு வேளாண் காலநிலை மண்டலத்தை, குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகும்.


இலக்கு

சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மாணவர்களை திறமையான கால்நடை மருத்துவர்களாக மாற்றவும், உள்ளூர் மற்றும் பிராந்திய நலன்களின் களம் சார்ந்த பிரச்சனைகளில் புதுமையான ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் மற்றும் வளர்ந்த தொழில்நுட்பங்களை ஆய்வகத்திலிருந்து இறுதி பயனர்களுக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த பிராந்தியத்தின் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தரமான சேவைகளை வழங்குவதற்கும், கால்நடை மற்றும் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோரின் திறனை வளர்ப்பதற்கும், கிராமப்புற விவசாய சமூகத்தின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் இது முயற்சிக்கிறது.

உள்கட்டமைப்பு

சேலம் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அழகிய வடிவமைக்கப்பட்ட நிர்வாகத் தொகுதி, ஸ்மார்ட் கிளாஸ் அறைகளுடன் கூடிய எட்டு கல்வித் தொகுதிகள், மாணவர் மற்றும் மாணவியருக்களுக்கான தனி விடுதி, நூலகத் தொகுதி, கேன்டீன், முதல்வர் குடியிருப்பு, விடுதிக்கு காப்பாளர்கள் குடியிருப்புகள் மற்றும் விருந்தினர் மாளிகை உள்ளது. மேலும், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் ஆலைகள், கால்நடை உற்பத்தி நுட்பங்களை உள்ளடக்கிய கால்நடை பண்ணை வளாகம் மற்றும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவ வளாகம் உள்ளிட்ட முழு அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக வசதிகளுடன் 15 சிறப்புத் துறைகள் உள்ளன.

ஆசிரியர்கள்

  • பேராசிரியர்கள் - 7
  • இணைப் பேராசிரியர்கள் - 7
  • உதவிப் பேராசிரியர்கள் - 24

மேலும் தகவலுக்கு:

டாக்டர். ஏ. இளங்கோ
முதல்வர்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தலைவாசல் கூட்டு சாலை, நத்தகரை சுங்கச் சாவடி அருகில்,
சேலம் - 636 112. தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி: +91-4282-290998
மின்னஞ்சல்: deanvcrislm@tanuvas.org.in