மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம் 12.02.1971 அன்று சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக திட்டம் மூலம் மேச்சேரி மற்றும் மாண்டியா செம்மறி ஆடுகளின் இறைச்சி பண்பினை ஆராய்வதற்காக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 05.06.1978 அன்று சேலம் மாவட்டம், மேச்சேரி ஒன்றியம் பொட்டனேரி கிராமத்திற்கு தற்போது உள்ள இடத்திற்கு மாற்றப்பட்டு மேச்சேரி செம்மறி ஆட்டின் மேம்பாட்டிற்காக பல்வேறு ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சி நிலையம் சேலம் - மேட்டூர் நெடுஞ்சாலையில் சேலத்திற்கு மேற்கே 35 கீ .மீ தொலைவிலும் மேட்டூரிலிருந்து கிழக்கு திசையில் 15 கீ.மீ தொலைவிலும் 77° 56’E தீர்க்கரேகையிலும் 11° 45’N அட்சரேகையிலும் கடல்மட்டத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலும் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 164.36 ஏக்கர்.
இந்த பகுதி சமமான மற்றும் குன்று பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. சமமான பகுதியில் களிமண் மற்றும் குன்றுப்பகுதியில் பாறைகளும் காணப்படுகிறது. இந்த பகுதியின் ஆண்டு சராசரி மழையளவு 894 மில்லி மீட்டர் ஆகும். பொதுவாக ஜூலை மாதம் முதல் நவம்பர் வரையிலான மாதங்களின் அதிகளவு வெப்பம் 34.3 டிகிரி செல்சியஸ் ஆகும். குறைந்தளவு வெப்பம் 21.9 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவுசெய்யப்பட்டுள்ளது
மாதம் | சராசரி மழையளவு மீ.மீ (1983-2020) |
---|---|
ஜனவரி | 3.76 |
பிப்ரவரி | 4.05 |
மார்ச் | 21.25 |
ஏப்ரல் | 58.42 |
மே | 96.88 |
ஜூன் | 61.71 |
ஜூலை | 86.76 |
ஆகஸ்ட் | 117.14 |
செப்டம்பர் | 161.60 |
அக்டோபர் | 156.92 |
நவம்பர் | 96.41 |
டிசம்பர் | 36.66 |
வருட மழையளவு | 901.56 |
மேச்சேரி செம்மறி ஆடு நடுத்தர உடல் அமைப்பும், இளம் பழுப்பு நிறத்துடன் குட்டையான ரோமத்துடன் இருக்கும். கிடாய், பெட்டை இரண்டிற்கும் கொம்புகள் இல்லை. இவ்வின ஆடுகள் சேலம் மாவட்டத்தில் உள்ள மேய்ச்சல் ஏரி நிறைந்த மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர் மற்றும் கொளத்தூர் ஒன்றியங்களில் அதிகமாக வளர்க்கப்பட்டு வருகிறது, மேச்சேரி ஊரின் பெயரால் இதனை மேச்சேரி ஆடு என்று பெயரிட்டு அiof;கப்படுகிறது. தற்போது இவ்வகை ஆடுகள் சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் சில பகுதியிலும் காணப்படுகிறது. இவ்வினம் ஏறக்குறைய 12.5 லட்சம் எண்ணிக்கையில் உள்ளது. இது தமிழ் நாட்டிலுள்ள மொத்த எண்ணிக்கையில் 22.6 சதவீதம் ஆகும். இவ்வின ஆடுகள் 15-18 மாதத்தில் இனவிருத்திக்கு தயார் ஆகி 5 அரை முதல் 6 வருட காலம் நல்ல குட்டிகளை உற்பத்தி செய்யும் திறனை கொண்டது. அதன் ஆயுள் fhyங்களில் 5 - 6 தரமான குட்டிகளை ஈனும் திறன் பெற்றது ஆகும். மேலும் தமிழ் நாட்டிலுள்ள செம்மறி ஆடுகளில் மேச்சேரி இன ஆடுகள் இறைச்சிக்கும், தோலுக்கும் மிகவும் சிறந்த இனமாக கருதப்படுகிறது.
இந்நிலையத்தில் உள்ள ஏறத்தாழ 30 ஏக்கரில் தீவன உற்பத்தி பற்றிய பல்வகை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி மானாவரி பகுதியாக இருப்பதால் மானாவரிக்கு ஏற்ற தீவன பயிர்களை கண்டறிய பல்வகை தீவன புற்கள், பயறுவகை தீவனங்கள் பயிர் செய்யப்பட்டு அதனுடைய வளர்ச்சி திறன், தீவன உற்பத்தி திறன், வறட்சியை தாங்கும் திறன் போன்றவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறந்த வகையான புல், பயறு வகை தீவனம் இத்துடன் பல்வகை வேளாண் காடுகள் அமைத்து விவசாயிகளுக்கு செயல் விளக்கங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பல வகையான தீவன பயிர்களின் விதைகள், கரணைகள், நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. .
இந்த பிரிவில் ஆடு மற்றும் மாடுகளுக்கு தீவனமாக பயன்படும் தீவன பயிர்களான கம்பு நேப்பியர் ஒட்டு ரகம் கோ -4, கோ -5, சிகப்பு தண்டு, சூப்பர் நேப்பியர் மற்றும் கினியா புல், கொழுக்கட்டை புல், வேலிமசால், முயல் மசால் ஆகியவைகள் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு கண்டு உணர்வதற்கு மாதிரி அலகுவாகவும், விதைகள், இடுபொருட்களை விவசாயிகளுக்கு கொடுக்கவும் பயன்பட்டு வருகிறது. .
இந்த பிரிவில் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படக்கூடிய கிளைரிசிடியா , அகத்தி , வாகை , சூபாபுல், வேம்பு, கல்யாண முருங்கை, கொடுக்காபுளி, புளியன் மற்றும் பூவரசு மர கன்று நாற்றங்கால் உற்பத்தி செய்து பண்ணையின் தேவைக்கும், தேவையான விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. .
மண்புழு உரம் தயாரித்தல் பிரிவில் பண்ணையில் கிடைக்கும் ஆட்டு எருவினை கொண்டு மண் புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரிவானது விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல் விளக்கம் கொடுத்தலுக்கும் மாதிரி அலகாகவும் பயன்பட்டுவருகிறது. உற்பத்தி செய்யப்படும் மண் புழு உரம் பண்ணையின் தேவைக்காகவும், விவசாயிகளுக்கு குறைந்த விலையிலும் கொடுக்கப்பட்டு வருகிறது . .
அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையை சேர்ந்த தாவரம். தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என அழைக்கப்படுகிறது. அசோலாவானது அதிக அளவு நைட்ரஜனை தன்னில் பொருத்தி கொள்ளும் தன்மை கொண்டதால், இதில் அதிக அளவு புரத சத்து உள்ளது. மேலும் அசோலாவில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், வளர்ச்சிக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, காப்பர் மற்றும் மக்னேசியும் உள்ளது. அதனால் அசோலாவை கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக அளிக்கலாம். இந்த பிரிவு மூலம் விவசாயிகளுக்கு அசோலா விதை வழங்கி அவர்களுடைய வீட்டில் அசோலா உற்பத்தி செய்து தீவனமாக அளித்து கால்நடைகளின் உற்பத்தியை அதிகரிக்க உறுதுணையாக உள்ளது. .
பேராசிரியர் மற்றும் தலைவர்,
மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலையம், பொட்டனேரி - 636 453
சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி எண்: +91-4298 - 262023
மின்னஞ்சல்: msrs@tanuvas.org.in