துணை வேந்தரின் மடல்துணைவேந்தர் அலுவலகம்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
மாதவரம் பால் பண்ணை,
சென்னை-600051
தமிழ்நாடு, இந்தியா.

vc@tanuvas.org.in

வாழ்த்துகள்!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற, நூற்றாண்டு பழமையான நிறுவனமான சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியிலிருந்து மலர்ந்தது. இப் பல்கலைக்கழகம், பல்வேறு கல்லூரிகள், ஆராய்ச்சி மையங்கள், கால்நடைப் பண்ணைகள் மற்றும் பயிற்சி மையங்களை அங்கமாகக்கொண்டு 1989 ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவின் முதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமான ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைத் துறை விவசாயத்தின் முக்கியத் துணைத் துறையாகும். தேசிய கணக்குப் புள்ளிவிவரம்-2020 இன் மதிப்பீட்டின்படி, மொத்த விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் கால்நடைகளின் பங்களிப்பு 24.32 சதவீதத்திலிருந்து (2014-15) 29.35 சதவீதமாக (2019-20) அதிகரித்துள்ளது. 2019-20ல் மொத்த இந்தியப் பொருளாதாரத்தில் கால்நடைத் துறை 4.35 சதவிகிதம் பங்களித்தது. விவசாயப் பொருளாதாரத்திற்கான பங்களிப்பு அதிகரிப்பின் தொடர்ச்சியான போக்கு, கால்நடைத் துறையை விவசாயத் துறையின் வளர்ச்சி இயந்திரமாக மாற்றியுள்ளது.

மாண்புமிகு வேந்தர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு இணை வேந்தர் அவர்களின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத் துறையில் இப் பல்கலைக்கழகம் முன்னேற்றப்பாதையில் பீடுநடை போட்டு வருகிறது. கடந்த சில தசாப்தங்களில் ஒன்பது கல்லூரிகள்; பன்னிரண்டு ஆராய்ச்சி / உற்பத்தி நிலையங்கள்; பதினைந்து ஆராய்ச்சி ஆய்வகங்கள்; இருபத்தேழு விரிவாக்க மையங்கள் மற்றும் தரச்சான்றிதழ் பெற்ற பல ஆய்வகங்கள் என பரந்த உள்கட்டமைப்பு வசதிகளோடு இப் பல்கலைக்கழகம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பல விருதுகளை பெற்றுள்ளது. இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் சமீபத்திய தரவரிசையில், பல்கலைக்கழகம் மாநில கால்நடை பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும், நாட்டின் அனைத்து விவசாயக் கல்வி நிறுவனங்களில் பன்னிரண்டாவது இடத்தையும் பிடித்தது. இப் பல்கலைக்கழகம் பெற்ற 19 காப்புரிமைகள்; 94 தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; நோய் கண்டறிதல் மற்றும் தீவன பகுப்பாய்வுக்கான அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்கள்; கால்நடைத் தொழில் முனைவோருக்கான உள்ளீட்டு வசதிகள்; தடுப்பூசிகள் மற்றும் வணிகமயமாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த அறிவியல் கட்டுரைகள் ஆகியன பல்கலைக்கழகத்தின் பெருமையினை பறை சாற்றுகின்றன.

பல்கலைக்கழகத்தினை அதன் அடுத்த கட்ட சாதனைக்கு எடுத்துச் சென்று கால்நடை மருத்துவ அறிவியல் துறையில் நமது மாநிலத்தையும் நாட்டையும் பெருமைப்படுத்த ஒரு குழுவாக ஒன்றிணைவோம்! வளம் பெறுவோம்!