கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

வரலாறு

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகத் 09.10.2012 அன்று துவங்கப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள இராமையன் பட்டியில் சுமார் 139.21 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கல்லூரி அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

குறிக்கோள்

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிள் உள்ள கறவைமாடு, ஆடு மற்றும் கோழிப் பண்ணைகள், பண்ணை யாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் திருநெல்வேலி இராமையன் பட்டியில் இக்கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு

இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப் படிப்பு தொடங்குவதற்கு ஏதுவாக 2011 - 2012 ஆம் ஆண்டு ஏழு துறைகளுடனும் 40 மாணவர்களுடனும் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்திய கால்நடை மருத்துவ கழக ஒப்புதலுடன் 2015-16 ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை 60 ஆகவும், 2017-18 ல் 80 ஆகவும், 2021-22 முதல் 100 ஆகவும் உயர்த்தப்பட்டது.

கால்நடைப் பண்ணை வளாகம்

கால்நடைப் பண்ணை வளாகமானது பால் பண்ணை, செம்மறியாடு, வெள்ளாடு, கோழி, குதிரை, வெண்பன்றி மற்றும் தீவனப் பயிர்கள் உற்பத்தி ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியது. பண்ணைப் பராமரிப்பு குறித்த நேரிடைப் பயிற்சிகள் இவ்வளாகம் மூலம் மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. மேலும் கால்நடை ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வல்லுனர்களுக்கு ஒரு ஆராய்ச்சிக் கூடமாகவும் இது விளங்குகிறது. கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஒரு பயிற்சிக்கூடமாகவும் இது செயல்படுகிறது. இவ்வளாகம் பண்ணையாளர்களுக்குத் தேவைப்படும் இனவிருத்திக்கான ஆட்டுக் கிடா, தீவனப்புல் கரணைகள், தீவனப்பயிர் விதைகள் ஆகியனவற்றையும் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. மேலும், குஞ்சுப் பொரிப்பான்கள் மற்றும் முயல் பண்ணைகள் அமைக்க முனைப்புடன் இவ்வளாகம் செயல்பட்டு வருகிறது. இத்துறையில் பண்ணைகள் அமைக்க விரும்பும் பயனாளிகளுக்கு அவர்களின் விருப்பம், முதலீட்டுத் தொகை மற்றும் எவ்வகைக் கால்நடைப் பண்ணையமைத்தல் தகுந்தது என்பதைப் பொறுத்து அவர்களுக்கு வரவுசெலவுத் திட்ட அறிக்கையை தயாரித்து கொடுத்தல் போன்ற சேவைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும் தீவன விதைகள் மற்றும் கரணைகளைக் கால்நடை விவசாயிகளின் நலனுக்காக விற்பனை செய்து வருகிறது.

கால்நடை சிகிச்சை வளாகம்

கால்நடைகளில் நோய்ப் பரிசோதனை, சிகிச்சை மற்றும் நோய் மேலாண்மையில் தென் மாவட்டப் பண்ணையாளர்கள் பயனுறும் வகையில் பன்முக மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான சிகிச்சைகள் தொடர்ந்து அனைத்து பணி நாட்களிலும், கூடுதலாக நடமாடும் கால்நடைச் சிகிச்சைப் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டு சொக்கட்டன்தோப்பு மற்றும் தென்பத்து ஆகிய கிராமங்களில் கால்நடைச் சிகிச்சை சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இவ்வகையில் சமீப காலத்தில் இக் கல்லூரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடந்த வெற்றிகரமான அறுவைச் சிகிச்சைகள் வருமாறு:

  • நாயில் கிழிந்த சிறுநீரகப்பையைச் சீரமைத்தல்
  • குதிரையில் கண்புழுவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றல்
  • ஆட்டில் பக்கவாட்டு வயிறு குடலிறக்க அறுவைச் சிகிச்சை
  • கன்றில் தொப்புள் வழிக் குடலிறக்க அறுவைச் சிகிச்சை.
  • இரயிலில் அடிபட்ட கன்னியின நாய் முக இழப்பு மீட்பு அறுவைச் சிகிச்சை
  • ஆட்டில் மடிப் புற்றுக் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியது
  • மாட்டில் அடிமார்புப் புற்றுக்கட்டி அகற்றும் அறுவைச் சிகிச்சை
  • சிறுநீரகக் குழாய்ச் சுருக்குதசை மேலாண்மை அறுவைச் சிகிச்சை போன்றவையாகும்.

மேற்கண்ட நவீன அறுவைச் சிகிச்சைகளைச் சிறந்த முறையில் நடத்துவதற்கு ஏதுவாக

  • நுண்ஒலி அலைக் கருவி
  • ஈ.சி.ஜி
  • உயிர்நிலை அறிகுறி கண்காணிப்புக் கணினித்திரை
  • இன்ஃபியுசன் பம்ப் போன்ற நவீனக் கருவிகள் இக்கல்லூரியில் உள்ளன.

கால்நடைகளில் முக்கியத்துவம் மற்றும் அவைகளின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இக்கல்லூரியானது,

  • வெறிநோய்த் தடுப்பபூசி முகாம்
  • குதிரையின ஆரோக்கிய முகாம்
  • தெருநாய்களில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளுதல் ஆகிய பணிகளை முழு முனைப்புடன் மேற்கொண்டு செய்து வருகிறது.

ஆராய்ச்சி

இக்கல்லூரியின் பல்வேறு துறைகளில் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் கள ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவைகள்:

  • சர்வதேச நிதி பங்களிப்பு மூலம் செயல்படும் ஆராய்ச்சி திட்டம் - 2
  • தேசிய நிதி பங்களிப்பு மூலம் செயல் படும் திட்டங்கள் - 13.
  • இக்கல்லூரியில் முடிவுற்ற தேசிய நிதி பங்களிப்பு திட்டங்கள் - 3.

அவை பின்வருமாறு

  • தீவன உற்பத்தியை கால்நடை வளர்ப்போர் வேளாண் பெருமக்களின் நிலத்தினிலே அதிகரிக்க மாதிரி தீவன விதை வங்கிகளை பரப்புவித்தல்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் துணைத் திட்டத்தின்கீழ் கால்நடை நுண்ணுயிரி வளர்ப்பு
  • இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய கால்நடை மரபுவள அமைப்பின் கீழக்கரிசல் இனச்செம்மறியாடு பாதுகாப்பு திட்டம்

கால்நடை விரிவாக்கப் பணிகள்

இக்கல்லூரியானது கால்நடை மற்றும் வேளாண் பெருமக்களுக்காக பல்வேறு வகையில் கால்நடை விரிவாக்கப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அவையாவன; கால்நடை வளர்ப்பில் அனைத்து வகையான சந்தேகங்களுக்கும் ஆலோசனை அளித்தல், இதனை நேர்முகமாகவோ, தொலைபேசி (ம) அலைபேசி, அஞ்சல் மற்றும் மின் அஞ்சல் மூலமாகவோ வழங்கல். மேலும் திருநெல்வேலி அகில இந்திய வானொலியுடன் இணைந்து கால்நடைகள் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவதோடு, கால்நடை விவசாயிகளின் வெற்றிக் கதைகளையும் ஒலிபரப்புகிறது. தொலைக்காட்சியிலும் கால்நடைகள் பற்றிய நிகழ்ச்சிகளை இக்கல்லூரி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.

இக்கல்லூரியானது கால்நடைப் பராமரிப்புத் துறை, புதுவாழ்வுத் திட்டம், ஆத்மா போன்ற அரசு சார்ந்த மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களின் தேவைகளுக்கேற்ப நிலைய, புற மற்றும் சிறப்புப் பயிற்சிகளை அளித்து வருகிறது. கூடுதலாக பொங்கல் பெரு விழா, உழவர் விழா மற்றும் அரசுப் பொருட்காட்சிகள், செய்முறை விளக்கங்கள் போன்ற பல விதமான கால்நடை முகாம்களை இக்கல்லூரி நடத்தி வருகிறது. பல்வேறு தலைப்புகளில் துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் போன்றவற்றையும் தயாரித்து வெளியிட்டு வருகின்றது.

மாணவர்கள் விடுதி வசதிகள்

இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களின் இருபாலர்களுக்கும் தனித்தனியே விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.மாணவர்களுக்கான உணவக வசதியும் விடுதியிலேயே அமைக்கப் பட்டுள்ளது. ஒரு முதன்மை விடுதிக் காப்பாளர் மற்றும் மூன்று துணை விடுதிக்காப்பாளர்களும் (ஒரு மகளிர் துணை விடுதிகாப்பாளர் உட்பட) நியமிக்கப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

மாணவர்களின் சமூகப் பங்களிப்பு

இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் மர்றும் செஞ்சிலுவை சங்கம் வாயிலாகப் பல்வேறு சமுதாய நலப்பணிகளை மாணவர்கள் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

தொடர்புக்கு:

முதல்வர்

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்

திருநெல்வேலி - 627 358.

தொலைபேசி எண்: +91-462 -2336345

மின்னஞ்சல் முகவரி: deanvcritni@tanuvas.org.in