மனிதவள மேம்பாட்டிற்காகவும் கோழிப் பண்ணையாளர்களின் நலனுக்காவும் தமிழ் நாட்டில் இரண்டாவது கால்நடை மருத்துவக் கல்லூரி நாமக்கல்லில் 14.06.1985 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரி நாமக்கல்லிலிருந்து 7 கி.மீ. தொலைவில் மோகனூர் சாலையில் உள்ள இலத்துவாடியில் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
பன்னாட்டுக் கல்வி மற்றும் மேலாண்மை நிலையத்தால் "உத்யோக் எக்சலன்ஸ்" என்ற விருது இக்கல்லூரியின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுச் சாதனைக்காக வழங்கப்பட்டது.
இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இக்கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய 22 துறைகள் செயல்பட்டு வருகின்றன. 1993ஆம் ஆண்டு முதல் முதுநிலைப் பட்டப்படிப்பும், 1995 ஆம் ஆண்டு முதல் முனைவர் பட்டப்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதுவரை இக்கல்லூரியில் 13 மாணவர்கள், வெளியிடப் பயிற்ச்சிக்காக அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழத்திற்கும் விர்ஜினியா பல்கலைக்கழகத்திற்கும் சென்று வந்துள்ளனர். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளிடப் பயிற்சிக்காக பங்களாதேஷ் சிட்டகாங்க் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழத்திலிருந்தும் மாணவர்கள் இக்கல்லூரிக்கு வந்து சிகிச்சை துறையில் பயிற்சி பெறுகின்றனர்.
இக்கல்லூரியில் உள்ள நூலகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சம்பந்தமான புத்தகங்கள், குறிப்புக் கையேடுகள், தேசிய மற்றும் சர்வதேச சஞ்சிகைகள் ஆகியவை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு உள்ளன. இக்கல்லூரியின் நூலகத்தில் தானியங்கி முறையில் புத்தகப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்நூலகத்தில் 10,240 புத்தங்கள், 83 சஞ்சிகைகள், 2570 பழைய ஆய்வுக் கோப்புகள், 48 மின்னணு புத்தங்கள், 48 வீடியோ ஒலிப் பேழைகள் மற்றும் 145 குறுந்தகடுகள் ஆகியவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் உள்ளன. இக்கல்லூரியின் கணிப்பொறி மையத்தில் கணினிக் கட்டமைப்பு வசதியுடன் கூடிய 36 கணினிகள் உள்ளன. இம்மையத்தின் மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்குக் கணிப் பொறிச் செயல்பாடுகள் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அனைத்துத் துறைகளுக்கும் இம்மையத்தின் மூலம் இணையத்தள வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அரசின் உயிர்த் தொழில்நுட்பவியல் துறை, இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம், மத்திய பட்டு ஆராய்ச்சி மையம், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நிதி உதவி பெறப்பட்டும் முதுநிலை ஆராய்ச்சிகள் மூலமும் பண்ணையாளர்களின் பிரச் சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகின்றன. இது வரை ரூ225.7 இலட்சத்திற்கான 28 ஆராய்ச்சித் திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. தற்போது ரூ19.79 கோடி மதிப்பிலான 34 ஆராய்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலேயே முதன் முறையாக கோழிகளில் சுவாச நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிர்க்கிருமியைக் கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி அதனுடைய குணாதிசயங்கள் கண்டறியப் பட்டன. மூன்று கலப்பினக் கோழியினங்களான நாமக்கல் கோழி -1, நாமக்கல் காடை -1, நாமக்கல் தங்கக் காடை உருவாக்கப்பட்டுள்ளன. நாமக்கல் காடை-1 இறைச்சிக்காவும், நாமக்கல் தங்கக் காடை முட்டைக்காகவும் உருவாக்கப் பட்டுள்ளன.
பருவச் சுழற்சிக்கு வராத பசுக்கள் மற்றும் எருமைகளைக் குறைந்த செலவில் பருவத்திற்கு வர வைக்கும் புரஜஸ்டிரான் தொய்க்கப்பட்ட யோனி பஞ்சு உத்தி கால்நடைப் பண்ணையாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.
கோழிப் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை சுற்றுப்புறச் சீர்கேடு இன்றி மட்கு உரமாக்கி, அதனைப் பயிர்களுக்கு பயன்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, இது பல கோழிப்பண்ணையாளர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இறந்த கோழியின் கொழுப்பு எண்ணெயில் இருந்து பயோ-டீசல் தயாரிக்க முடியும் என்றும், அது சாதாரண பயோ-டீசலை விடத் தரம் உயர்ந்ததாக உள்ளது என்றும் ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டறியப்பட்டு அதற்குக் காப்புரிமையும் கோரப்பட்டுள்ளது.
முட்டையிட்டு ஓய்ந்த கோழிகள், இறந்த விலங்குகள் மற்றும் இறைச்சிக் கூடத்தின் கழிவுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி அதைச் செல்லப் பிராணிகளுக்கான உணவு தயாரிக்கும் திட்டமும் இக்கல்லூரியில் செயல்பட்டு வருகிறது.
நாமக்கல் பகுதியின் கோழிப் பண்ணைகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பறவையின அறிவியலுக்கான உயர்கல்வி பயிற்சியாளர் பயிற்சி மையம் ஒன்று, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் ஏற்படுத்தப்பட்டு 1995 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
கோழிப்பண்ணைகளில் தீவனத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குவதற்காக தீவனப் பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆய்வகம் மூலம் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற நிலைப்படுத்தப்பட்ட தீவனக் கலவை தயாரிப்பது பற்றி பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தீவன மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதனுடைய முடிவுகள் உடனுக்குடன் குறுஞ்செய்திகள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் தெரிவிக்கப் படுகின்றன. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளின் பல பகுதிகளிலிருந்தும் தீவன மாதிரிகள் பெறப்பட்டுப் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையத்தில் உள்ள வானிலை ஆலோசனை மூலம் தினசரி வானிலை முன்னறிவிப்புத் தகவல்கள் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டு, தட்பவெப்ப மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க உதவுகிறது.
கோழியின நோய்ப் பரிசோதனை மற்று கண்காணிப்பு ஆய்வகம் நாமக்கல் மற்றும் அருகாமையில் உள்ள மாவட்டங்களின் கோழிப் பண்ணையாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கோழியின நோய்களையும் புதிதாக ஏற்படும் நோய்களையும் தடுப்பதற்கான வழி முறைகளை வழங்கி வருகிறது.
இக்கல்லூரியில் உள்ள கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகள், கலப்பின மாடுகள், காங்கேயம் மாடுகள், மேச்சேரி செம்மறி ஆடுகள், திருச்சி கருப்புச் செம்மறியாடு, தலைச்சேரி மற்றும் ஜமுனாபாரி வெள்ளாடுகள், பெரிய வெள்ளை யார்க்ஷ்யர் பன்றிகள், டியூராக் வகைப் பன்றிகள், குதிரைகள், சோவியத் சின்சில்லா மற்றும் வெள்ளை ஜெயின்ட் முயல்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கோழிப் பண்ணையில் இறைச்சி கோழி வகையில் நாமக்கல் கோழி -1, ரோடு ஐலேண்ட் ரெட் இனம், கடக்நாத், ஆஸ்ட்ராலூப், சில்க்கி, அலங்காரப் பறவைகள், அசில், வெள்ளை லகார்ன், வான்கோழி, கினிகோழி, ஈமு கோழி, நெருப்புக்கோழி, ஜப்பானியக் காடை ஆகியவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்கத்திற்குத் தேவையான கால்நடை இனங்கள், கோழியினங்கள் மற்றும் தீவன விதைகள் ஆகியவை விவசாயிகளுக்கு விற்பனை செய்யப் படுகின்றன.
பல்கலைக்கழத்தின் கீழ் செயல்பட்டு வரும் கால்நடை மற்றும் கோழிப்பண்ணை களுக்குத் தேவையான தீவனத்திற்காக இக்கல்லூரியில் தீவன ஆலை நிறுவப்பட்டு 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பண்ணையாளர்களுக்கு கணினி மென்பொருள் மூலம் கறவை மாடுகளின் உற்பத்தித் திறன் மற்றும் எடைக்குத் தகுந்தவாறு தீவனக் கலவை தயாரிப்புப் பற்றி ஆலோசனைகள் இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன.
இக்கல்லூரியில் பள்ளிப்படிப்பைத் தொடராமல் விட்டவர்களுக்காவும், மற்றும் வேலைவாய்ப்பு இல்லா இளைஞர்களுக்காகவும் சுயவேலை வாய்ப்பு மற்றும் செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கால்நடைப் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு முதுநிலைப் பட்டய (டிப்ளமோ) படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இக்கல்லூரியின் கால்நடை மருத்துவமனை நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் அதை சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கும் சேவை செய்து வருகிறது. இம் மருத்துவமனையில் எண்டோஸ்கோபி, அல்ட்ரா சவுன்ட், அல்ட்ரா சோனோகிராபி, ஈ.சி.ஜி, டையாதெர்மி, சிறப்பு பல் மருத்துவம் மற்றும் மலடு நீக்கச் சிகிச்சைகள் போன்ற சிறப்புப் பரிசோதனைகளுடன் இயங்கி வருகிறது. நாய்களில் பருவச் சுழற்சி நிலை நிணநீர் பரிசோதனை மற்றும் உடல் அணு அமைப்பியல் மூலம் கண்டறியப்படுகிறது. நவீன கண் அறுவைச் சிகிச்சைகளான கண்புரை அகற்றுதல், விழித்திரைப் புண்ணிற்கு இமை இணைப்படலம் மூலம் சிகிச்சை அளித்தல் மற்றும் கண்ணாடி வில்லை பொருத்துதல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
முதல்வர்,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் - 637002.
தொலைபேசி : +91-4286 266491-93
மின்னஞ்சல் : deanvcri@tanuvas.org.in