விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்

கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர்


மையத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரின் (TNAU) கட்டுப்பாட்டின் கீழ் கோழி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் (PRDC) என்னும் பெயரில் 19.05.1981 (Proc.No.R.2/45-12 (6)/81, Dt: 26.4.1981 of the Registrar, Tamil Nadu Agricultural University, Coimbatore) அன்று கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தோற்றுவிக்கப்பட்டது. கோழிப்பண்ணைகள் புதிதாய்த் தோன்றி தழைத்து வந்த அன்றைய கோவை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு இம்மையம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் 20.09.1989ல் ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட போது இம்மையம் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் எனப் பெயரிடப்பட்டு, திருப்பூர் மாவட்டத்தின் கால்நடை மற்றும் கோழி வளர்ப்பு சார்ந்து பண்ணையாளர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படத்துவங்கியது. அதன்பிறகு 08.04.1999 முதல் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர் எனப் பெயரிடப்பட்டு விரிவாக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமானது திருப்பூர் 641604, காமராஜர் சாலை, பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.


குறிக்கோள்கள்

 • இயற்கை வளங்கள் நிர்வகிப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் கோழிவளர்ப்பு சார்ந்த தொழில்நுட்பங்களை விரிவாக்கப் பணியாளர் மற்றும் முகவர் வாயிலாக கால்நடைப் பண்ணையாளர்களுக்கு கொண்டு சேர்த்தல்.
 • தேவையான குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் வளர கால்நடை மற்றும் கோழி ஆராய்ச்சிகள் மற்றும் விரிவாக்க பணிகள் மூலம் இணைக்கும் பாலமாக செயல்படுதல்.
 • கால்நடை பண்ணைசார் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் கால்நடை வளர்ப்பு சூழலியலில், பல்கலைக்கழகம் மற்றும் தொழில்முனைவோர் வாயிலாக தாக்கத்தை ஏற்படுத்துதல்.

முக்கிய செயல்பாடுகள் மற்றும் சேவைகள்

விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், நிலமற்ற விவசாயக்கூலிகள், கிராமப்புற ஏழைகள், வேலையற்ற இளைஞர்கள், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் மற்றும் தொழில்முனைவோருக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிவளர்ப்பு சார்ந்த பல்வேறு உள்வளாக, வெளிவளாக பயிற்சிகள் வழங்குதல்.

வழங்கப்படும் பயிற்சிகள்

 • கறவை மாடு வளர்ப்பு
 • வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு
 • நாட்டுக் கோழி வளர்ப்பு
 • பன்றி வளர்ப்பு
 • முயல் வளர்ப்பு
 • ஜப்பானிய காடை வளர்ப்பு
 • வான்கோழி வளர்ப்பு
 • மதிப்புக்கூட்டப்பட்ட பால் மற்றும் இறைச்சிப் பொருட்களை தயாரித்தல் பதப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல்
 • காலத்திற்கேற்றவாறு விவசாயிகளுக்குத் தேவையான தலைப்புகள்

பிற சேவைகள்

 • நேரிலும், தபாலிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், தொடுதிரையிலும் கால்நடை வளர்ப்பு மற்றும் கோழிசார்ந்த ஆலோசனைகள் வழங்குதல்
 • பண்ணைகள் ஆரம்பிக்கப்படும்போதும், நோய்தொற்றுக் காலங்களிலும் தேவைப்படும் அனைத்து சமயங்களிலும் பார்வையிட்டு தொழில்நுட்பரீதியாக ஆலோசனைகள் வழங்குதல்
 • பிரேதப்பரிசோதனை செய்து மற்றும் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தல்.
 • இம்மையத்தின் ஆய்வுக்கூடத்திலோ பல்கலைக்கழகத்தின் பிற கல்லூரிகள் மற்றும் ஆய்வகங்களிலோ மாதிரிகளைப் பரிசோதித்து பண்ணையாளர்களுக்கு முறையான தீர்வுகளை பரிந்துரைத்தல்
 • நுண்ணுயிரியல், ஊநீரியல் போன்ற ஆய்வக பரிசோதனைகள் மேற்கொண்டு நோய்க்கூறினை உறுதி செய்தல்
 • நுண்ணுயிர்க்கொல்லி செயல்படுதிறன் பரிசோதனை, நீர்ப்பகுப்பாய்வு மற்றும் ஏ1/ஏ2 பரிசோதனைகள் செய்தல்
 • தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியில் செயல்படும் மரபியல் சார்ந்த உற்பத்தித்திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக மேச்சேரி இன செம்மறி ஆடுகளைத் தேர்ந்தெடுத்து வழங்குதல்
 • அசோலா வளர்ப்பு மற்றும் கால்நடைத்தீவன முறை பற்றி செயல்முறை விளக்கம் அளித்தல்
 • கிராமங்களை தத்தெடுக்கும் திட்டம் – வடுகபாளையம் புதூர், பல்லடம், திருப்பூர் மாவட்டம்.
 • விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு முறைகள் பற்றி பண்ணையிலேயே செயல்முறை பயிற்சியளித்தல்
 • பண்ணையாளர்களின் நலன்பொருட்டு தொழில்நுட்பங்களை பண்ணையிலே ஆய்வு செய்து பரிந்துரைத்தல்
 • நடப்பு கால கால்நடை மற்றும் கோழி பண்ணை தொழில்நுட்பங்களை துண்டுப்பிரசுரங்கள், மாத இதழ்களில் கட்டுரைகள் போன்றவற்றை தமிழிலேயே வெளியிடுவதன் மூலம் எளிமையாக பண்ணையாளர்களிடம் கொண்டு சேர்த்தல்
 • கோவை மண்டல அகில இந்திய வானொலி நிலையத்திற்கு நோய் முன்னறிவுப்பு மற்றும் மேலாண்மை சார்ந்த தகவல்களை பண்ணை வானொலி அறிக்கையாக அனுப்பி வைத்தல்
 • பிற இணை துறைகள்(கால்நடை பராமரிப்பு, வேளாண் துறைகள்), அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் நடத்தும் கால்நடை நல முகாம்கள், மக்கள் தொடர்பு முகாம்கள், மலடுநீக்க முகாம்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளுதல்.
 • கால்நடை பண்ணையாளர்களின் வெற்றிக் கதைகளை ஆவணப்படுத்துதல்
 • பண்ணையாளர்கள் சந்திப்பு மற்றும் மன்றங்கள் ஒருங்கிணைத்தல், கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு சார்ந்த கண்காட்சிகள் நடத்துதல்.
 • பல்கலைக்கழக வெளியீடுகளை விற்பனை செய்தல்
 • பல்கலைக்கழக தயாரிப்புகளான தாதுஉப்புக்கலவை, தாதுஉப்புக்கட்டி போன்றவற்றை விற்பனை செய்தல்
 • இப்பல்கலைக்கழகத்தின் மூலமாக பல்வேறு இடங்களில் நடத்தப்படும் கருத்தரங்குகளில் பங்குபெற விவசாயிகளை ஊக்குவித்தல்.
 • கறவை மாடு வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு சார்ந்த துறைகளில் சுயவேலைவாய்ப்பு பயிற்சி
 • பல்கலைக்கழகத்தின் இதர பிரிவுகளுடன் சோதனை மாதிரி சேகரிப்பு சார்ந்த பணிகளில் இணைந்து பணியாற்றுதல்.
 • விவசாயிகளுக்கு பின்வரும் கட்டன சேவைகள் வழங்கப்படுகின்றன
வ.எண் பரிசோதனைகள் தொகை (ரூ.)
1. கோழி பிரேதப்பரிசோதனை 100.00
2. நுண்ணுயிர்க்கொல்லி செயல்திறன் ஆய்வு 100.00
3. நீர்ப்பகுப்பாய்வு மற்றும் நுண்ணுயிர் பகுப்பாய்வு 100.00
4. வெள்ளைக்கழிசல் நோய்க்கான எதிர்பொருள் அளவீடு – வடிகட்டித்தாள் சோதனை 5.00
5. கோழிப் பண்ணையில் (5000 கோழிகள் வரை) நோய் கண்டறியும் பொருட்டு பண்ணையைப் பார்வையிடல் 500.00
6. கோழிப் பண்ணையில் (5000 கோழிகளுக்கு மேல்) நோய் கண்டறியும் பொருட்டு பண்ணையைப் பார்வையிடல் 1000.00

மையத்தின் உட்கட்டமைப்பு வசதிகள்

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் இருக்கும் கால்நடை மருத்துவமனை வளாகத்தினுள் 15 செண்ட் பரப்பளவில் இம்மையம் அமைந்துள்ளது. பணியாளர்களுக்கான இடவசதி மற்றும் ஆய்வகத்தினுடன் இணைந்த பயிற்சி அறை ஆகியவற்றை இது உள்ளடக்கியது. இந்த ஆய்வகம் பரிசோதனைக்குத் தேவையான குறைந்தபட்ச உபகரணங்களைக் கொண்டுள்ளது. இம்மையத்தில் மூன்று அசோலா செயல்விளக்கத் தொட்டிகளில் அசோலா வளர்க்கப்பட்டு கால்நடைப் பண்ணையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அவர்கள் தங்களுக்கான அசோலா தீவனத்தை தாங்களே வளர்த்துக்கொள்ள முடிகிறது. 2020-21ஆம் ஆண்டில் 172 பயனாளிகளுக்கு கிட்டத்தட்ட 86 கிலோ அசோலா வித்துக்கள் வழங்கப்பட்டுள்ளன.

நடப்பிலுள்ள ஆராய்ச்சித் திட்டங்கள்

 • தேசிய கால்நடை திட்டம், மத்திய மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இயற்கையான இனப்பெருக்க முறையில் மேச்சேரி இன செம்மறி ஆடுகளில் மரபியல் பண்புகளை மேம்படுத்துதல் திட்டத்தினை கால்நடை பராமரிப்புத்துறை, திருப்பூருடன் இணைந்து செயல்படுத்துதல்.
 • நபார்டு நிதியுதவியுடன் கால்நடை பண்ணைப்பிரிவு ஊக்கமளிப்பு நிதி திட்டத்தின் கீழ் “அறிவியல் ரீதியில் காங்கேயம் மாட்டின உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்”
 • தமிழ்நாடு நவீனப்படுத்தப்பட்ட வேளாண்மை பாசன திட்டம் – கறவை மாடுகள் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தினால் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து அளிப்பதற்கான யுக்திகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்துதல்.
 • மாவட்ட செயலாக்க மையம் - தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் க்ராண்ட் (Grand) அளிப்பதன் மூலமாக கறவை மாடுகளின் உற்பத்தி மற்றும் லாபத்தை அதிகரித்தல் (தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம்).

பண்ணையாளர்களுக்கு நலம்பயக்கும் சாதனைகள்

 • நாட்டுக் கோழிகளில் கொட்டூக்னியா மற்றும் கோனாடீனியா இன்பெண்டிபுலம் பாதிப்பு தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நாட்டுக் கோழிகளில் கண்டறியப்பட்டது.
 • இய்மிரியா ப்ருனட்டி பாதிப்பினால் நாட்டுக் கோழிகளின் பின்சிறுகுடல் மலக்குடல் மற்றும் குடல்வால் பகுதியில் ஏற்படும் பாதிப்புகளை முதன்முறையாக ஆவணப்படுத்தப்பட்டது.
 • இதய மேலுறை நீர்க்கோவை – கல்லீரல் வீக்க குறைபாடு (லீச்சி வியாதி) தமிழ்நாட்டில் பல்லடம் பகுதி கறிக்கோழிகளில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் பெற்ற விருதுகள்

 • 2018ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றம், கரும்பு பெருக்க நிறுவனம் கோயம்புத்தூர் ஆல் நடத்தப்பட்ட விவசாயிகள் கண்காட்சியில் திரு ஆனந்த் குமாரசாமி, திருப்பூர் சிறந்த தொழில்முனைவோர் விருது பெற்றார்.

பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
கால்நடை மருத்துவமனை வளாகம், பழைய பேருந்து நிலையம் எதிரில்,
திருப்பூர் - 641604
தொலைபேசி: +91–421 2248524
மின்னஞ்சல் : tirupurvutrc@tanuvas.org.in