கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஓசூர்

வரலாறு

ஒசூரில் 18.07.2011 அன்று கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் நிறுவப்பட்டது. பின்னர் அது கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியாக மாற்றியமைக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில், மத்திகிரி என்ற ஊரில் 80 ஏக்கர் பரப்பளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது. கல்லூரியில் நிர்வாக வளாகம், நூலகம், தொழில்நுட்ப வளாகம், கணினிக் கூடத்துடன் கூடிய பொறியியல் வளாகம், மனிதவள மேம்பாட்டு வளாகம், சுற்றுச்சூழல் கட்டுப் படுத்தப்பட்ட பண்ணை வீடுகள், உடற் பயிற்சிக் கல்வி வளாகம், கோழியினத் தீவன ஆய்வகம் மற்றும் மாணவ மாணவியருக்கான தனித்தனி தங்கும் விடுதிகள் மற்றும் பொது உணவருந்தும் கூடம், கற்பித்தலுக்கான கோழிப்பண்ணை வளாகம், தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் சாராப் பணியாளர்களுக்கான உறை விடங்கள், தீவன உற்பத்திச்சாலை போன்ற வசதிகள் அமையப் பெற்றுள்ளன.

நோக்கம்

  • கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக்கான பாடத் திட்டங்களை உயர்திற முறையில் வழங்குதல்
  • தேவைக்கேற்றபடி, கோழியினம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
  • கோழியின நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கும் கல்லூரிக்கும் இடையே வலுவான தொடர்பை தொழில்நுட்பப் பகிர்தலின் மூலம் ஏற்படுத்துதல்

பட்டப்படிப்பு

இக்கல்லூரியில் நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்பு பி.டெக் (கோழியினத் தொழில்நுட்பம்) கற்பிக்கப் படுகிறது. இதில் மூன்றரை ஆண்டுகள் (ஏழு பருவங்கள்) முழு நேரப் படிப்பும், ஆறு மாத காலம் கோழியின நிறுவனங்களில் தொழில்நுட்பப் பயிற்சியும் அடங்கும். உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி, கோடுவெளியில் 20 மாணவர்களுடன் 2011-12 ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படிப்பு, பின்னர் 2014-15 ல் ஒசூர், மத்திகிரிக்கு மாற்றப்பட்டது. 2017-18 முதல் ஒவ்வொரு ஆண்டும் 40 மாணவர்கள் இப்பட்டப்படிப்பிற்காக சேர்க்கப்படுகிறார்கள். இக்கல்லூரியில் 2019-20 முதல் இரண்டாண்டு முதுநிலைப் பட்டப்படிப்பும் [எம்.டெக் (கோழியின தொழில்நுட்பம்)] வழங்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள்

இக்கல்லூரியில் கோழியின அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பொறியியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மாணவர்களைக் கோழியின உற்பத்தி மற்றும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெறுமாறு பயிற்றுவிக்கின்றனர். மேலும் இக்கல்லூரியின் ஆசிரியர்கள் படிப்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புக்கு

முதல்வர்,

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி,

ஓசூர் - 635 110, தமிழ்நாடு.

தொலைபேசி: +91-4344 689005

மின்னஞ்சல்: deancppm@tanuvas.org.in