VCRI, Tirunelveli

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி

கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல் துறை


திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் கால்நடை ஒட்டுண்ணியியல் துறையானது, 22 .06 ..2012 ம் ஆண்டில் துவக்கப்பட்டது. கால்நடைகளில் ஒட்டுண்ணி நோய்களை கண்டறிவதும் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் தரமான கல்வியினை பயிற்றுவிப்பதோடு, தொடர்ச்சியான பயனுள்ள ஆய்வு மூலம் விரிவாக்கப் பணிகளில் ஈடுபடுவதே இத்துறையின் நோக்கமாகும். ஒரு பேராசிரியர், ஒரு இணைப் பேராசிரியர், இரண்டு உதவிப் பேராசிரியர்கள், இரண்டு ஆய்வக தொழில் நுட்பர், இரண்டு உதவியாளர்கள், ஒரு கால்நடை உதவியாளர் மற்றும் ஒரு துப்புரவு பணியாளர் ஆகிய பணியிடங்கள் இத்துறையில் உள்ளது. இத்துறையின் மூலம் கால்நடை மருத்துவ இளநிலை பட்டப் படிப்பில், கால்நடை ஒட்டுண்ணியியல் துறையின் இளநிலை பாடத்திட்டம் 2013-14 வருடத்திலிருந்து பயிற்றுவிக்கப்படுகிறது


குறிக்கோள்கள்

  • இந்திய கால்நடை மருத்துவ கழகம் அறிவுறுத்திய பாடத்திட்டத்தின் படி கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில் இளநிலை பட்டப்படிப்பு பயிற்றுவித்தல்..
  • கால்நடை ஒட்டுண்ணியியல் துறையில் ஆராய்ச்சி பணிகளுக்கு ஏதுவாக ஆய்வக வசதிகளை வழங்குதல்.
  • கால்நடை மருத்துவமனை மற்றும் பல்கலைக் கழக பயிற்சி நிலையங்கள் மூலம் பெறப்படும் மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகளை தெரிவித்தல்.
  • கால்நடை வளர்ப்போருக்கு, கால்நடைகளில் ஒட்டுண்ணி நோய்களினால் ஏற்படும் பாதிப்பினையும் அவற்றினை கட்டுப்படுத்தும் முறைகளையும் அறிவுறுத்துதல்.
  • தொடர்ச்சியாக துறை வளர்ச்சிக்கான, நிகழ்வுகளையும் பயிற்சிகளையும், கால்நடை மருத்துவர்களுக்கு வழங்குதல்.

கல்வி

கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல் (3+2) பாடமானது இளநிலை பட்டபடிப்பு III வது தொழில்நுட்ப வருட மாணவர்களுக்கு MSVE 2016 புதிய இந்திய கால்நடை மருத்துவ குழு பாடதிட்ட வழிகாட்டுதலின் படி, பொது கால்நடை ஒட்டுண்ணியியல், கால்நடை குடற்புழுவியல் , கால்நடை பூச்சியியல் மற்றும் உண்ணியியல் , கால்நடை ஓரணு ஒட்டுண்ணியியல் ஆகிய பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படுகிறது. மேற்க்கண்ட பிரிவுகளில் கணிணி உதவிக் கல்வியின் பங்களிப்பில் 3சிடி ராம் (3CD Rom) தயார் செய்யப்பட்டு அவற்றினால் கால்நடைகளில் ஏற்படும் உடற்கூறு பாதிப்புகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை சுழற்சி ஆகியவை பயிற்றுவிக்கப்படுகிறது.

ஆராய்ச்சி

குடற்புழு நீக்க மருந்துகளுக்கான நோய் எதிர்ப்பு திறனை அறியும் ஆய்வுகள், ஆடுகளில் குடற்புழு எதிர்ப்புத் தன்மை மற்றும் உருளை புழுவிற்கு எதிராக மூலிகை மருத்துவ ஆராய்ச்சி, கோழிகளில் இரத்த கழிச்சல் நோய்க்கான மூலிகை மருத்துவம் மற்றும் மூலக்கூறு பலபடியாக்கல் மூலம் ஓரணு ஒட்டுண்ணி நோய்களை அறிதல் ஆகியவற்றில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் துறை தெளிவான பார்வை மற்றும் கவனம் செலுத்துகிறது.

விரிவாக்கம் :

ஒட்டுண்ணி நோயினை கட்டுப்படுத்தவும், தற்காக்கவும் மாதிரி பரிசோதனைகளை மேற்கொள்ளல், பண்ணையாளர்களுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் குடற்புழு நீக்க மருந்தின் முறையான பயன்பாடு பற்றிய அறிவுரை வழங்குதல், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் பல்கலைகழக பயிற்சி நிலையங்களின் தேவைக்கு ஏற்ப நோய்அறி சோதனைகளை மேற்கொள்ளுதல், பண்ணையாளர்கள், மாணவர்கள் மற்றும் துறை வல்லுநர்களுக்கான சிறப்பு உரைகள், தொலைக்காட்சி மற்றும் வானொலி உரைகள் வழங்குதல், சிறு தொழில்நுட்ப செய்தி துணுக்குகள் அவ்வப்போது அகில இந்திய வானொலி மூலம் வழங்குதல், கால்நடை ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் குறித்தும் அதனை கண்டறிந்து கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுதல், கால்நடைகளில் ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்துவது குறித்து புத்தகங்கள் மற்றும் பொது கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வெளியிடுதல், கால்நடை உதவி மருத்துவர், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வக தொழில் நுட்பர்களுக்கு பயிற்சிகள் வழங்குதல் போன்ற விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.


பேராசிரியர் மற்றும் தலைவர்,
கால்நடை மருத்துவ ஒட்டுண்ணியியல் துறை,
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 358.
தொலைபேசி: +91-462-2336345
மின்னஞ்சல்: vpavcritni@tanuvas.org.in