உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டிய உணவுப் பொருள்கள் பற்றி கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கென உணவு மற்றும் பால் வள நிலையம், 1992இல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோடுவெளியில் 82.12 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டது. இந்த நிலையம் முதலில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்குப் பால் பதப்படுத்துதல், மீன் பதப்படுத்துதல் மற்றும் இறைச்சிப் பதப்படுத்துதல் பற்றிய பயிற்சிகளை அளித்து வந்தது.
2005இல் இந்த நிலையமானது, கல்லூரியாக வலர்ந்தது. நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பு பிடெக் (உணவுத் தொழில்நுட்பம்), 20 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பு எம்.டெக் (உணவுத் தொழில் நுட்பம்) 2011-12ஆம் ஆண்டு முதலும், முனைவர் பட்டப்படிப்பு 2013-14 ஆம் ஆண்டு முதலும் நடத்தப்பட்டு வருகிறது
இந்தக் கல்லூரி, கென்ட் பல்கலைக்கழகம், (பெல்ஜியம்), மற்றும் நெபரெஸ்காப் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) போன்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களோடு செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிலைங்களுக்குச் செல்வதன் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் பால் பொருட்கள், இறைச்சிப் பொருட்கள், மீன் பொருட்கள் மற்றும் வேளாண்மைப் பொருட்கள் பதப்படுத்துதல் சார்ந்த பேராசிரியர்கள் ஒருங்கே பணிபுரிந்து, மாணவர்களுக்கு கல்வி வழங்குகின்றனர். இந்தக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், கணினி மையம், உடற்பயிற்சிக் கூடங்கள், குளிர் சாதன வசதியுடன் கூடிய கலையரங்கம், உணவகம், விடுதிகள், பண்டகச்சாலை போன்ற வசதிகள் உள்ளன. கல்லூரியிலும் விடுதியிலும் தடையில்லா மின்வசதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விடுதியில் 24 மணிநேரமும் கம்பியில்லா இணையதள வசதி, கணினி மற்றும் அச்சுப்பொறி போன்ற வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. உள்உடற் பயிற்சி நிலையம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, உணவுக்கூடம், துவைப்பான், கொசு வலையுடன் கூடிய ஜன்னல்கள், புல்வெளிகள் போன்ற வசதிகள் விடுதியில் உள்ளன. கிரிக்கெட் மைதானம், கால்பந்து மைதானம், கைபந்து, பூப்பந்து விளையாட்டுத் திடல்கள் உள்ளன. மேஜைப் பந்து, சதுரங்கம், கேரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டள்ளன.
பொறியியல் தொழிற்கூடம், உணவுத் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், உணவு நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், மீன்பதப்படுத்தும் நிலையம், இறைச்சி மற்றும் கோழி பதப்படுத்தும் நிலையம், மின் பொறியியல் துறை, அடுமனை மற்றும் பிஸ்கட் ஆய்வுக்கூடம், தானியங்கள், பயறு வகைகள் மற்றும் வாசனை பொருட்கள் பதப்படுத்தும் நிலையம், அடிப்படை அறிவியல் ஆய்வுக்கூடம், வரைப்படக் கூடம் போன்ற பல ஆய்வக வசதிகள் உள்ளன.
கல்லூரி நூலகத்தில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்கக்கல்வி சார்ந்த 2500 புத்தகங்கள், 12 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி இதழ்கள் மற்றும் வலை தளத்தின் மூலம் 3000க்கும் மேற்பட்ட மின்னணு ஆய்விதழ்கள் படிக்கும் வசதி போன்றவை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இக்கல்லூரியின் பட்டதாரிகள் வங்கிகள், ஆவின், ஐடிசி, ஆச்சி மசலா, ஹட்சன் போன்ற அரசு மற்றும் தனியார் உணவுத் தொழில் துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் பலர், மேற்படிப்பு பயின்று வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றின் மூலம் மாணவர்களுக்குச் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
கல்லூரியில் உணவு சார்ந்த ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது வரை 10 க்கும் மேற்பட்ட புற நிதியுதவியுடன் கூடிய திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. தற்போது 6 நிதியுதவித் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், இக்கல்லூரியில் நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் பதப்படுத்தக் கூடிய பால் பதன் செய் நிலையம், உணவு பதப்படுத்தும் அமைச்சகம், நடுவண்அரசு மூலம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் பால்பதப்படுத்துதல், தரம் அறிதல் மற்றும் பையகப்படுத்தும் வசதிகள் உள்ளன.
இக்கல்லூரியில் மாணவர்களுக்கென 2012ஆம் ஆண்டில் பால் பதன் செய்யும் கற்றுணர் நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், புதுடெல்லி மூலம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் பனிகூழ் (ஐஸ்கீரிம்) தயாரிப்பில் மூலப்பொருள்கள் வாங்குவது முதற்கொண்டு, விற்பனை வரை கற்றுணர்ந்து வருகின்றனர்.
சமுதாய அளவிலான கறவை மாடுகள் பராமரிப்பு நிலையம், இக்கல்லூரியில் இயங்கி வருகிறது. இதில், மாதிரி புல் பண்ணை, கால்நடைப் பண்ணை, சாண எரிவாயுக் கலன், தானியங்கிப் பால் கறவை இயந்திரம், மண்புழு உரம் தயாரிக்கும் குழி போன்றவை உள்ளன. இது மாணவர்கள் மற்றும் விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் மாதிரி நிலையமாக உள்ளது.
இக்கல்லூரியில் மாநில அளவிலான உணவு பதப்படுத்தும் நிலையம் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், நடுவண்அரசு மூலம் 2012 - 2013இல் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை, பால், மீன் மற்றும் இறைச்சி தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் நிலையப் பயிற்சிகள் 1000க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்களுக்கும் சுயஉதவிக் குழு மகளிர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்ட உணவுத் தரக்கட்டுப்பாட்டு அலுவர்களுக்கும் ஆவின் நிலைய ஊழியர்களுக்கும் பயிற்சிகள் நடந்தன. இத்திட்டத்தின் மூலம் ஐஸ்கீரிம் தயாரிக்கும் இயந்திரங்கள், பையகப் படுத்தும் இயந்திரங்கள், குளிர்சாதன சேமிப்புக் கலன், நொறுக்குத் தீனி தயாரிக்கும் இயந்திரங்கள், மசாலப்பொடி தயாரிக்கும் இயந்திரங்கள், வேளாண்பதன் செய் இயந்திரங்கள், சூரியஉலர்த்தி போன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டுப் பயன்பாட்டில் உள்ளன. இது மாணவர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பயன் அடையும் வண்ணம் உள்ளது.
உணவு பதப்படுத்தும் அமைச்சகம், நடுவண் அரசு, புதுடெல்லி மூலம் 75 இலட்சத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிலையம், பழங்களைக் கழுவுதல், கூழாக்குதல், சாறு பிழிதல், பாட்டிலில் அடைத்தல் மற்றும் இருப்புச் செய்தல் போன்ற வசதிகளை பெற்றுள்ளது. மேலும் இறைச்சி மற்றும் மீன்பதன்படுத்தும் நிலையம் நிறுவப்பட்டு வருகிறது.
முதல்வர்,
உணவு அறிவியல் புலம்,
உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி,
அலமாதி - கோடுவெளி, சென்னை - 600 052
தொலைபேசி: 044-27680214/15
மின்னஞ்சல்: deancfdt@tanuvas.org.in